மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையமான UPSC தேர்வில் பீகாரை சேர்ந்த சுபம் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.


இந்திய நிர்வாகத்துறை (IAS), இந்திய வெளியுறவுத் துறை (IFS), இந்திய காவல் துறை (IPS) போன்ற பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வு மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி ஆரம்ப கட்ட தேர்வுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கான மெயின் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். 


இதில் இந்திய நிர்வாகத் துறை, இந்திய வெளியுறவுத் துறை, இந்திய காவல் துறை, குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. அனைத்துக் கட்ட தேர்வுகள் நிறைவடைந்ததை அடுத்து தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. அந்த முடிவின்படி தேர்வில் பங்கேற்ற 761 பேருக்கு பணி வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 151 பேருக்கு தற்காலிக பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.


இதில் தேர்வாளர்கள் பெற்று இருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்,எஸ். குரூப் ஏ மற்றும் குரூப் பி என வகைப்படுத்தப்பட்டு அந்த துறைகளில் பணி வழங்கப்படும். இதன் மூலம், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 836 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். குறிப்பாக இந்திய ஆட்சித் துறையில் 36 பணியிடங்களும் இந்திய வெளியுறவு துறையில் 200 பணியிடங்களும் இந்திய காவல் துறையில் 302 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


 இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவர்கள் மும்பை ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர். ஜக்ராதி அவஸ்தி என்பவர் இந்த தேர்வில் 2 வது இடத்தையும், யாஷ் ஜலுகா மற்றும் மம்தா யாதவ் 3 வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை http//www.upsc.gov.in. என்ற அதன் இணையதளத்தில் அறியலாம். முடிவுகளுக்கான லிங்க் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.


தேர்வு முடிவுகள் குறித்து கூடுதல் விபரங்களை அறிய தேர்வு மையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அங்கு சென்று சந்தேகங்களை கேட்டுப்பெறலாம். அல்லது 23385271, 23381125, 23098543 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு அறியலாம். முழுமையான மதிப்பெண் விபரங்கள் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்து இருக்கிறது.