ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அரசின் உயரிய நிர்வாகப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 5) கடைசித் தேதி ஆகும்.  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2024ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Continues below advertisement

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. 

Continues below advertisement

வயது வரம்பு

தேர்வர்கள் குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து, 32 வயது வரை இருக்கலாம். எனினும் சமூக அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

என்ன தகுதி?

பட்டப் படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும் யுபிஎஸ்சி தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

அதில், முதல் முறையாக விண்ணப்பிக்கும் தேர்வர்கள், பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை, தாய் பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள், இ – மெயில் முகவரி, மொபைல் எண், ஒரு முறை பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டு, ஓடிபியை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க நாளையே கடைசி

விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 5) கடைசித் தேதி என்பதை நினைவில் கொள்வது முக்கியம். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.

அனுமதிச் சீட்டு https://upsconline.nic.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்படும். அதைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தபாலில் எந்த அனுமதிச் சீட்டும் வெளியிடப்படாது. விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் புகைப்படம், சமீபத்திய ஒன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக அறிவிக்கை வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு அறிவிக்கையைக் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: 011-23385271/ 011-23381125/ 011-23098543 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

யுபிஎஸ்சி இணையதள முகவரி: https://upsc.gov.in/