UPSC Civil Service Final Result: 2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். மொத்தம் 685 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.


தேர்வு முறை எப்படி?


முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்பவும் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 


தேர்வு நடைபெற்றது எப்போது?


முன்னதாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி யூபிஎஸ்சி சிஎஸ்இ முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் சில தினங்களிலேயே அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்றது. தேர்ச்சி பெற்றோருக்கான முதன்மைத் தேர்வு, 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியாகின. 


முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஏப்ரல் 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு மே 26 வரை நடைபெற்றது. இந்நிலையில் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று (மே 30ஆம் தேதி) வெளியாகி உள்ளன. 
 
இதில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். புனித ஸ்டீபன் கல்லூரி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ஸ்ருதி சர்மா. ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார். 


முதலிடம் பெற்றது குறித்து ஸ்ருதி சர்மா கூறும்போது, ''தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.


இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்ற பெண் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4ஆவது இடத்தை, ஐஸ்வர்யா வர்மா என்ற தேர்வரும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 42ஆவது இடத்தில், ஸ்வாதி ஸ்ரீ என்ற பெண் தேர்வாகி உள்ளார்.


இந்த 685 பேரில் 244 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இருந்து 73 பேரும், ஓபிசி பிரிவில் 203 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஸ்சி, எஸ்டி பிரிவில் இருந்து 105 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


தேர்வானோர் குறித்த முழு விவரம், அவர்கள் பெற்றுள்ள இடம் குறித்த விவரங்கள் கீழே..