உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 2 லட்சம் உயர்நிலை மற்றும் இண்டர்மீடியட் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மார்ச் 10ஆம் தேதி வரை மொத்தம் 29 தேர்வர்கள் முறைகேடு செய்ததாகப் பிடிபட்டுள்ளனர். அதேபோல, முறைகேட்டில் ஈடுபட்டது, போலி கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் என 101 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கில வினாத்தாள் வெளியாகி சர்ச்சை
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், அம்மாநில சிறப்பு செயல் படை 16 பேரைக் கைது செய்தது. முன்னதாக ஆங்கில பொதுத்தேர்வு, மார்ச் 7ஆம் தேதி காலை வேளையில் நடைபெறுவதாக இருந்தது. பிடிஐ செய்தி நிறுவன அறிக்கைப்படி, ஹர்தோய் மாவட்டத்தில் கத்தியாமாய் கிராமத்தில் உள்ள ஜகன்னாத் சிங் பப்ளிக் பள்ளியில் ரெய்டு நடந்தது. இதில், 14 பேர் ஆங்கில வினாத் தாளுக்கு பதில் எழுதும் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி முதல்வரின் வீட்டில் 5 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் விடையை எழுதிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் என்று கூறி இருந்தார். அங்கிருந்து 20 விடைத் தாள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!
அதேபோல இரண்டாவது முறையாக தலேல் நகர் பகுதியில் ஜெய் சுபாஷ் மகாபலி கல்லூரியில், 2 பெண்கள் விடை எழுதிக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் போல வேடமிட்டு, விடையை எழுதிக் கொண்டிருந்தனர்.
தொடர் முறைகேடு சம்பவங்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்வுகளில் தொடர் முறைகேடு சம்பவங்கள் நடைபெற்று வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வு முறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.