IIFA விருதுகள்
இந்திய திரைத்துறை நட்சத்திரங்களை கெளரவிக்கும் வகையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான IIFA விருதுகள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. திரைப்படம் , வெப் சீரிஸ் , ஆவணப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை லாபதா லேடீஸ் படத்தில் நடித்த 17 வயதான நிதான்ஷி கோயல் வென்றார். ஆலியா பட் , கத்ரீனா கைஃப் போன்ற முன்னணி பாலிவுட் நடிகைகள் இந்த பிரிவில் இருந்தபோது 17 வயது நடிகை வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
நிதான்ஷி கோயல்
கிரன் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லாபதா லேடீஸ். வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் புதிதாக திருமணமாக தனது கணவன் வீட்டிற்கு செல்லும் வழியில் தொலைந்து விடுகிறார். அவருக்கு பதிலாக இன்னொரு பெண்ணை தவறுதலாக அழைத்துச் சென்று விடுகிறார் அவள் கணவன். பிரிந்துபோன இந்த கணவன் மனைவி மீண்டும் ஒருவரை ஒரு தேடி அலையும் போராட்டமே இந்த கதை. கிராமப்புறங்களில் பெண்களின் நிலையை மெசேஜ் சொல்வதாக இல்லாமல் மிக எளிய நகைச்சுவையாக இப்படம் சொல்லப்பட்டிருந்த விதம் அனைவராலும் பாடாட்டுக்களைப் பெற்றது. நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகளில் இந்தியா சார்பாக லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இப்படத்தில் நாயகியாக நடித்த நிதான்ஷி கோஷ் தனது எதார்த்தமான நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 17 வயதே ஆன இவர் விருது வாங்கிய போது உணர்ச்சிவசப்பட்டார். இந்த விருதிற்காக நாமினேஷனில் இருக்கும் பலருக்கு தான் ஒரு பெரிய ரசிகை என்றும் இந்த விருது தனக்கு கிடைக்கும் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் பணியாற்ற வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்தார் அவர்.