நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் இல்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் முதன்மையான தேர்வுகள்







எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. 


அதேபோல மத்திய உயர் கல்வி நிலையங்களில் பொறியியல் படிக்க, JEE என்னும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது. 


இந்த ஆண்டு முதல் க்யூட் எனப்படும் CUET பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு ( CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு யுஜிசி சார்பில் வெளியாகி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடைபெற்றது. 




 



நுழைவுத் தேர்வுகள் ஒருங்கிணைப்பு


நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்க யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டது. இதன்மூலம் ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு அமலாகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைக்கும் தகவலை யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் இல்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 




ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து உரையாடினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உடனிருந்தார். 


மாணவர்களுடன் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒன்றாக இணைக்கும் முன்மொழிவு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.