மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பது, அசல் சான்றிதழ்களைத் திருப்பித் தராமல் இருப்பது ஆகியவற்றைச் செய்யும் உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.


முன்னதாக அக்டோபர் 31ஆம் தேதி வரை கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை 100 சதவீதம் திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்திருந்தது. நவம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை வெளியேறும் மாணவர்களுக்கு செயலாக்க கட்டணமாக 1000 ரூபாய்க்கு மேல் பிடித்தம் செய்யக்கூடாது என்று யுஜிசி தெரிவித்திருந்தது. 


எனினும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இதைப் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் உள்ளிட்டோர் இதுகுறித்து யுஜிசிக்குப் புகார் அளித்து வந்த நிலையில், மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பது, அசல் சான்றிதழ்களைத் திருப்பித் தராமல் இருப்பது ஆகியவற்றைச் செய்யும் உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரி முதல்வர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


* யுஜிசி சட்டம் 1956, பிரிவு 12பி-ன் படி தகுதிச் சான்றிதழ் திரும்பப் பெறப்படும். 


* உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்படும். 


* சிறப்பு உதவித் திட்டங்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் தகுதியற்றவை என்று பரிந்துரைக்கப்பட்டு, அறிவிக்கப்படும் 


* உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு செய்தித்தாள், இணையதளம் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும். 


* கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருப்பின் அவ்வாறு அழைக்கப்படுவதைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை 


* மாநிலப் பல்கலைக்கழகம் எனில், தேவையான உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்படும். 


இவ்வாறு யுஜிசி எச்சரிக்கை விடுத்து உள்ளது.


*


முன்னதாக மாணவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பித் தருவது குறித்து யுஜிசி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ”பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவும், அக்டோபர் 31 வரை மாணவர்களின் சேர்க்கை / இடம்பெயர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக உயர்கல்வி நிறுவனங்களால் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று UGC முடிவு செய்துள்ளது.


2022 கல்வி அமர்வுக்கான 2022- 2023 சிறப்பு வழக்கு,அக்டோபர் 31, 2022 வரையிலான ரத்து / இடம்பெயர்வுகள் காரணமாக, அனைத்துக் கட்டணங்களும் உட்பட முழுக் கட்டணமும் திரும்பப் பெறப்பட வேண்டும் (அதாவது பூஜ்ஜிய ரத்துக் கட்டணங்கள் இருக்க வேண்டும்) 31, 2022, செயலாக்கக் கட்டணமாக ரூ.1000/-க்கு மிகாமல் கழித்த பிறகு, ஒரு மாணவரிடமிருந்து வசூலிக்கப்படும் முழுக் கட்டணமும் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.