கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கட்டுப்படுத்தி வருகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்லூரிகள் திறப்பு,  கட்டணம் திருப்பி அளிப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகள் உள்ளிட்ட கல்லூரி செயல்பாடுகளுக்கான தேதிகளை, வருடாந்திர கால அட்டவணையாக யுஜிசி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) செயலர் மனிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’கல்லூரிகளில் சேர்ந்த பின்னால், சில மாணவர்கள் சேர்க்கையை திரும்பப் பெற்றால் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் மற்றும் கட்டணங்களை திருப்பி அளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து யுஜிசிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.


இது தொடர்பாக கடந்த ஜூன் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற யுஜிசி 570ஆவது ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. 


அதன்படி படிப்புகளுக்கான இடங்களை மாணவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வேண்டாம் என்று ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். அதேபோல சேர்க்கையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் அதிகபட்சமாக அலுவல் பணிகளுக்காக ரூ.1,000 மட்டுமே வசூலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் முழுக் கல்வியாண்டு அல்லது சம்பந்தப்பட்ட செமஸ்டருக்கான கட்டணத்தைப் பிடித்தம் செய்யக்கூடாது.


மாணவர் சேர்க்கையின் கடைசித் தேதிக்கு அதிகபட்சம் 15 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான நாட்களில் திரும்பப் பெற்றால், 100 சதவீதக் கட்டணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும். மாணவர் சேர்க்கையின் கடைசித் தேதிக்கு 15 நாட்களுக்குக் குறைவான நாட்களில் திரும்பப் பெற்றால், 10 சதவீதக்  கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையைத் தரவேண்டும். 


அதேபோல மாணவர்களின் சான்றிதழ்களைத் தாமதிக்காமல் திருப்பித் தர வேண்டும். இல்லையெனில் சார்ந்த கல்லூரிகளின் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதுநிலை கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்குள் ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். 


தொலைதூர, திறந்த நிலை மற்றும் இணைய வழிப் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்’’ 


இவ்வாறு யுஜிசி சார்பில் கூறப்பட்டுள்ளது. 


இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.ugc.gov.in/pdfnews/6994492_Fee-refund-polict_0001.pdf என்னும் இணைய முகவரி மூலம் அறிந்துகொள்ளலாம்.