யுஜிசி தேசிய தகுதித் தேர்வுக்கான டிசம்பர் மாத அமர்வில் எந்த நாளில் என்ன தேர்வு என்னும் முழு அட்டவணையை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி மூலம் நடத்தப்படுகிறது. 


கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்றன. இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல 2022 டிசம்பர் தேர்வுகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெற்றன.


இதைத் தொடர்ந்து 2023 ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.


டிசம்பர் மாத அமர்வு எப்போது?


இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வுக்கான யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மாணவர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.  மாணவர்கள் அக்டோபர் 30 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொண்டனர்.


இந்த நிலையில் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை, முழுமையான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 06ஆம் தேதி முதல் ஷிஃப்ட்டில் ஆங்கிலம், இந்தி, ரஷ்யன் மற்றும் பெர்ஷியன் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இரண்டாவது ஷிஃப்ட்டில் வரலாறு, மணிப்புரி, ஜெர்மனி, சிந்தி உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.




தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி முதலாவது ஷிஃப்ட்டில், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 2ஆவது ஷிஃப்ட்டில் இசை, உடற்கல்வி, இந்தியக் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து டிசம்பர் 8, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பல்வேறு தேர்வுகள் நடைபெறுகின்றன.




முழு தேர்வு அட்டவணையைக் காண https://nta.ac.in/Download/Notice/Notice_20231117125446.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.


விவரங்களை முழுமையாகக் காண https://ugcnet.nta.ac.in/images/public-notice-ugc-net-december-2023-for-application.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


தேர்வர்கள் இ- மெயில் முகவரி: ugcnet@nta.ac.in


கூடுதல் தகவல்களுக்கு https://ugcnet.nta.ac.in/