பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் மாதிரி வினாத்தாள், பாடத்திட்டம் இந்தத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. 


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 


இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாடத் திட்டம் இதுதான்!


இந்த நிலையில், க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்து அறியலாம்.  பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.  


மாணவர்களின் கல்வி அறிவு, விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.  


கேள்வித் தாள் எப்படி?


க்யூட் வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும் இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும் மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும்.


மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது கல்லூரியில் எந்தப் படிப்பை எடுக்க ஆர்வமாக இருக்கிறார்களோ, அந்த பாடங்களைத் தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி குறியீடு (code) கொடுக்கப்பட்டிருக்கும். அதை கவனமாகப் பார்த்து, எழுத வேண்டும்.


முதல் பிரிவில் மொழித் தேர்வு இரண்டாகப் பிடிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் நம் விருப்பத்துக்கு ஏற்ப மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம். இரண்டாவது பிரிவில் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பப் பதிவில் உள்ள பாடத்தைப் பொறுத்து, கேள்விகள் அமைந்திருக்கும்.


மூன்றாவது பிரிவில் பொது அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் அமைந்திருக்கும். குறிப்பாக பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், எண்ணியல் திறன் மற்றும் பகுத்தறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் வாசிக்கலாம்: அரசாணை 149ஐ நீக்குக: நவ.23-ல் உண்ணாவிரதம் - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கம் அறிவிப்பு