தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  மேலும் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசு ரூ.388 கோடி நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.




இங்கு சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடுதளம் மட்டுமே இருந்து வரும் நிலையில் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுபாதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ-321 ரக விமானங்களை பொறுத்தமட்டில் இதுபோன்ற 5 விமானங்களை நிறுத்தும் வகையில் தளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.




 ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 




தூத்துக்குடி விமான நிலையத்தில் 13,500 சதுர மீட்டர் பரப்பளவில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய பயணிகள் முனையத்தின் முகப்பு பகுதி தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடமான செட்டிநாடு அரண்மனை தோற்றத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தின் உட்புற பகுதிகள் தூத்துக்குடியின் சிறப்புகள் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. 




மேலும், பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுதளம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம், கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2023) இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்நிலையில் விமான விமான நிலைய விரிவாக்க பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமான நிலைய விரிவாக்க பணிகளின்போது மின்கம்பங்களை மாற்றி அமைப்பது குறித்தும், பொதுப்பாதை அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணிகளின் தற்போதைய  நிலை குறித்து, விமான நிலைய அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது விமான நிலைய இயக்குநர் சிவபிரசாத், மேலாளர் ஜெயராமன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்