தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அடிக்கடி திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு என்ற பகுதியில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஐந்து பேர் வந்துள்ளனர். காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் குறித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கும் 5 மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம் நகரை சேர்ந்த பொற்கனல், சென்னை கே.கே.நகரை சேர்ந்த மணிஷ்குமார், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகேஷ் குமார் சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரும் ஏன் செங்கல்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, 5 பேரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை கே.கே. நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த ஐந்து பேரும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்