கொரோனா முடக்கம் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காலத்தில் மாணவர்கள் சேர்க்கை ரத்து கட்டணம்/இடம்பெயர்வு உள்ளிட்ட கட்டணங்களை, 2021, இயல்புநிலை திரும்பும் வரையில் (அக்டோபர் 31 வரை) செலுத்துமாறு கல்லூரிகள் /கல்வி நிலையங்கள் வற்புறுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. 


இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட  வேண்டும் என கல்லூரிகள் /கல்வி நிலையங்களை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காலியிடங்களை நிரப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும். ஆனால், அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் செயல்முறை 2021 டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நடைபெறாலம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கட்டயாம்  அக்டோபர் 1 அல்லது அதற்கு முன்னதாக தொடங்கப்பட வேண்டும்.


இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் 2021 ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில்  கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 




இடைநிலை செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது, செமஸ்டர் தேர்வுகள் நடுத்துவது, செமஸ்டர் விடுமுறைகள் தொடர்பான முடிவுகளை உயர்க்கல்வி நிலையங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 






12-ஆம் வகுப்புத் தேர்வுகள்:


இந்தாண்டு 12-ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும்  மாநில வாரியத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே, 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று  உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.


12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி வாரியங்களுக்கும் உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது (50:20:30). மேலும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் 30:30:40 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, 10 மற்றும் 11 வகுப்பு மதிப்பெண்களுக்கு 30 சதவிகிதம் மதிப்பும், 12 வகுப்பு பிற தேர்வுகளில் எடுத்த மதிபெண்களுக்கு 40 சதவிகிதம் மதிப்பு வழங்கப்பட உள்ளது. 


மேலும், வாசிக்க: 


வரும் 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வித்துறை


JEE Main 2021 : மே மாத JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு..!