பல்வேறு சமூக ஊடங்களில் கல்லூரி தேர்வு அட்டவணை தொடர்பாக வலம்வரும் போலிசெய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) தெரிவித்தது .
இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், " உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுகள் அட்டவணை குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் யுஜிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும், 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கும் அறிவிப்பை யுஜிவி கடந்த மே 6-ஆம் தேதி வெளியிட்டது" என்று தெரிவித்தது.
முன்னதாக, மத்திய அரசு நிதியுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும், மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 2021 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், ஆன்லைன் தேர்வுகளை தொடரலாம் என்றும் இந்த முடிவு 2021 ஜூன் முதல் வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யுஜிசி கடந்த 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், " நாடு முழுவதும் அனைத்து உயர்நிலை கல்வி நிலையங்களிலும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஆன்லைன் தேர்வுகள் நடைபெறாலாம்" என்று தெரிவித்தது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதுக்கப்பை உறுதி செய்ய கோவிட்-19 பணிக்குழு மற்றும் அவசர உதவி மையங்களை உருவாக்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் (HEI கள்) பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவுறுத்தியது. தகுதியானவர்கள் அனைவரையும் கோவிட் தடுப்பூசி போடவும், அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பிப்ரவரி 2021-இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்து மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் என்றும் தெரிவித்தார்.