தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் தலைமை நிறுவனமான ஏஐசிடிஇ-ன் இடைக்காலத் தலைவராக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நியமிக்கபட்டுள்ளார்.
ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே செப்டம்பர் 1ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதை அடுத்து, ஜெகதீஷ் குமார் நியமிக்கப்படுவார் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்தியக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ''ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இடைக்காலத் தலைவராக, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரையோ உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரையோ அவர் தலைவராக இருப்பார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் முழு நேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 4ஆ தேதி ஜெகதீஷ் குமார் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னதாக ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜெகதீஷ் குமார் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஜெகதீஷ் குமார்
நானோ - எலக்ட்ரானிக் இயந்திரங்கள், நானோ ஸ்கேல் டிவைஸ் மாடலிங் மற்றும் சிமுலேஷன், புத்தாக்க மாதிரி கண்டுபிடிப்பு, செமி கண்டக்டர் இயந்திரங்கள் உள்ளிட்ட துறைசார் பணிகளில் புகழ்பெற்றவர் பேராசிரியர் ஜெகதீஷ் குமார். ஐஐடி டெல்லியில் மின்னணுவியல் பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர்.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் தலைமை நிறுவனமான ஏஐசிடிஇ-ன் இடைக்காலத் தலைவராக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நியமிக்கபட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாம்
GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
வகுத்தல் பாடம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியை; ஆட்சியர் செய்த அதிரடி