கணக்குப் பாடத்தில் வகுத்தலை சரியாகச் செய்யத் தெரியாமல் தலைமை ஆசிரியர் விழித்ததை அடுத்து ஆட்சியர் அவரை தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று பாலகாட். இதன் ஆட்சியராக கிரிஷ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் அண்மையில் அருகில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று பள்ளியின் நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு கணக்கு உள்ளிட்ட பாடங்கள் எவ்வாறு கற்றுத் தரப்படுகின்றன என்றும் குழந்தைகளின் கிரகிப்புத் திறனையும் ஆய்வு செய்ய முடிவெடுத்தார்.
வகுப்பறையில் உள்ள மாணவர்களோடு உரையாடிய ஆட்சியர் கிரிஷ் குமார், கரும்பலகையில் 411 என்ற எண்ணை 4 ஆல் வகுக்கச் சொல்லிக் கேட்டார். ஆனால் அங்கிருந்த குழந்தைகளால் அந்தக் கணக்கைச் செய்ய முடியாமல் போனது. கொரோனா காலத்தில் குழந்தைகள் கற்றல் இழப்பைச் சந்தித்த நிலையில், இந்த நிலை இயல்பு என்று உணர்ந்தார் ஆட்சியர் கிரிஷ் குமார்.
உடனடியாக அங்கிருந்த தலைமை ஆசிரியை சோனா துருவே-விடம் கணக்கைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லி உள்ளார். ஆனால் வகுத்தல் கணக்கை ஆசிரியை சோனா தவறாகப் போட்டுள்ளார். சரியாக கணக்கைச் செய்யுமாறு, ஆட்சியர் தலைமை ஆசிரியரிடம் சொல்ல, தலைமை ஆசிரியை சோனா திணறி, விழித்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ந்த ஆட்சியர் கிரிஷ் குமார், இந்த சிறிய கணக்கைக் கூட உங்களால் போட முடியவில்லை என்றால், எப்படி மாணவர்களுக்குக் கற்பிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து சோனாவை நீக்கியதோடு, அவருக்கு வர வேண்டிய ஊதிய உயர்வையும் நிறுத்தி வைத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது வீடியோவில் நெட்டிசன்கள் பலரும் தலைமை ஆசிரியை பற்றியும் அவரின் கற்பித்தல் திறன் குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல இன்னொரு அரசுப் பள்ளிக்கும் பாலகாட் ஆட்சியர் கிரிஷ் குமார் ஆய்வுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஆசிரியராலும் கணக்கைச் செய்ய முடியாமல் போனது. இது அங்குள்ள பள்ளிகளின் கல்வித் தரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.