இந்திய அரசமைப்புச் சட்ட நாளை, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் கொண்டாட பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனிஷ் ஜெயின், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''சுதந்திரத்துக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளைப் பின்பற்றி ஆண்டுதோறும் அரசியல் சாசன நாள் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் இந்திய ஜனநாயகம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. நம் ஜனநாயகம் நாட்டின் மிகப் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும் கூட. பண்டைய இந்தியா முடியாட்சி அல்ல, ஆனால் ஜனநாயகத் தன்மை கொண்டது என்று சான்றுகள் காட்டுகின்றன.
இதையும் வாசிக்கலாம்: SMC: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பின்பற்ற வேண்டிய 8 அம்சங்கள்; கல்வித்துறை உத்தரவு
இதை முன்னிட்டு 'இந்தியா: ஜனநாயகத்தின் தாய்' (பாரத்: லோக்தந்த்ரா கி ஜனனி) என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
1. காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அரசியலமைப்புச் சாசனத்தின் முன்னுரையை வாசிக்க வேண்டும்.
2. அதேபோல அரசியலமைப்புச் சட்டத்தின்அடிப்படைக் கடமைகளையும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வாசிக்க வேண்டும்.
3. அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவத்தை அனைத்து கல்வி நிலையங்களிலும் விளக்க வேண்டும்.
4. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அறிவிப்பு பலகையில், அடிப்படைக் கடமைகள் பற்றி ஒட்டி வைக்கவேண்டும்.
அனைத்து கல்வி நிலையங்களிலும் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் தங்கள் வளாகங்களில் நடைபெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜனிஷ் ஜெயின், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் அடிப்படை வசதிகளை வழங்கவும் புதிய விதிமுறைகளை யுஜிசி உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: CM Stalin Speech: பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தது தி.மு.க. அரசு- முதலமைச்சர் பெருமிதம்