மாணவர்கள் பட்டம் பெற்றாலும் படிப்பைக் கைவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் ராணிமேரி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார். 


ராணிமேரி கல்லூரியின் 104ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள்:


ராணிமேரி கல்லூரியில் இளங்கலைப் படிப்பில் 2702 மாணவிகளும் முதுகலைப் படிப்பில்  473  மாணவிகளும் பட்டங்களைப் பெற உள்ளனர். அதேபோல எம்.பில். மானவிகள் 84  பேர் பட்டங்களைப் பெற உள்ளனர். இதன்மூலம் மொத்தம் 3,259 மாணவிகள் இன்று பட்டங்களைப் பெறுகின்றனர்.  அதைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:


’’தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ராணிமேரி கல்லூரிதான். பெண்களுக்கு ஒளி விளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்ந்து வருகிறது. இந்தக் கல்லூரியை இடிக்க முயன்றபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் பட்டம் பெற்றாலும் படிப்பைக் கைவிடாதீர்கள். நீங்கள் கல்லூரியில் இருந்து விடைபெற்றாலும் கற்பதில் இருந்து விடை பெறக்கூடாது.


பெண்களுக்குச்‌ சொத்தில்‌ சம உரிமைச்‌ சட்டம்‌ கொண்டு வந்தது திமுக அரசு.


அரசுப்‌ பணியிடங்களில்‌ பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு. அதை உருவாக்கித்‌ தந்தவர்‌ தலைவர்‌ கலைஞர்‌. அதை இப்போது 40 விழுக்காடு ஆகவும்‌ உயர்த்தியிருக்கிறோம்‌. போகிற போக்கில்‌, ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்‌ என்று கேட்கின்ற நிலை வந்தாலும்‌ ஆச்சரியம்‌ இல்லை.


உள்ளாட்சி அமைப்புகளில்‌ பெண்களுக்கு 33 சதவீதம்‌ இட ஒதுக்கீடு. இப்போது 50 சதவீதம்‌ இடஒதுக்கீடு.


மகளிர்‌ சுய உதவிக்குழுக்களை அமைத்தது திமுக அரசுதான்‌. மகளிர்‌ தொழில்‌ முனைவோர்‌ உதவித்திட்டம்‌ கொண்டு வந்தோம்‌. இப்படி பெரிய பட்டியலை என்னால்‌ அடுக்கிக்‌ கொண்டிருக்க முடியும்‌.


அந்த வரிசையில்தான்‌ மகளிருக்கு கட்டணமில்லாப்‌ பேருந்து பயணத்தை உருவாக்கிக்‌ கொடுத்திருக்கிறோம்‌. இது ஏதோ வெறும்‌ கட்டணச்‌ சலுகை என்று நீங்கள்‌ நினைத்திட வேண்டாம்‌. பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம்‌ அமைக்கக்கூடிய திட்டம்‌ தான்‌ இந்தத்‌ திட்டம்‌. இதன்‌ மூலமாகஏராளமான பெண்கள்‌ கல்வி கற்கவும்‌, வேலைகளுக்காகவும்‌, சிறுதொழில்‌ நிறுவனங்களை உருவாக்கவும்‌ வெளியில்‌ வரத்‌ தொடங்கி இருக்கிறார்கள்‌.


எனது கனவுத்‌ திட்டங்களில்‌ ஒன்றான புதுமைப்‌ பெண்‌ - உயர்‌ கல்வி உறுதித்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இந்தத்‌ திட்டத்தினால்‌ இந்த ஆண்டு, ராணி மேரி கல்லூரியில்‌ இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ ஆண்டில்‌ பயிலக்கூடிய 1,039 மாணவியர்கள்‌ பயன்‌ பெற்றிருக்கிறார்கள்‌‌. இந்த ஆண்டு முதலாமாண்டு சேர்ந்த மாணவியரும்‌ இத்திட்டத்தின்‌ மூலமாக பயன்பெற உள்ளனர்‌. புதுமைப்‌ பெண் திட்டத்தின்‌ காரணமாக, இக்கல்லூரியில்‌ சேரும்‌ மாணவிகளின்‌ எண்ணிக்கை அதிகரித்துக்‌ கொண்டிருக்கிறது’’. 


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.