10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று பாராட்டு விழா நடத்துகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய், அவ்வப்போது சமூகம் சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பது வழக்கம். ஆனால் அரசியலில் களமிறங்க உள்ளார் என கடந்தாண்டு தகவல்கள் உறுதியான நிலையில் அவர் செய்த ஒரு சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். 


இந்நிகழ்ச்சி பனையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார். கிட்டதட்ட 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுடன் ஜாலியாக விஜய் உரையாடியும், விளையாடியும், அவர்களின் அன்பை மனநிறைவோடும் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சி இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. 


இந்நிலையில் நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுவது பற்றி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. கடந்தாண்டு பெற்றோர்களுடன் வந்திருந்த மாணவ, மாணவிகள் பல மணி நேரம் காத்திருந்ததாக புகார் எழுந்தது. அதனை தவிர்க்கும் பொருட்டு இரண்டு கட்டங்களாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் ஹாலில் நடைபெறும் இன்று மற்றும் ஜூலை 3 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. 


இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நேற்று நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். இதனிடையே விழா காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணிக்கே விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு அவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. விஜய்யை காண மக்கள் கூட்டம் கூடும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.