4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று (15.12.2022) தொடங்கியது. 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பணியிட மாறுதலுக்கான ஆணைகளை இன்று (15.12.2022) வழங்கினார்.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இறுதியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதனைப் பரிசீலித்த தமிழக அரசு, தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இணைய வழி இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான அரசாணையை 08.11.2022 அன்று வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, http://www.tngasa.in என்ற இணைய தள முகவரி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டன.
மொத்தம் பெறப்பட்ட 569 விண்ணப்பங்களில் காலிப்பணி இடமின்மை மற்றும் 50 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகிய காரணிகள் தவிர 192 ஆசிரியர்களுக்கு அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்த அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
அதன் அடையாளமாக 10 கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பணியிட மாறுதலுக்கான ஆணைகளை இன்று (15.12.2022) வழங்கினார்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in
*
உயர் கல்விக்கான உதவித் தொகை
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது.
அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பித்து, உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாம்: Guest Lecturer Post: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; டிச.27 கடைசி- விவரம்