அரசுக் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைத் தெரிவு செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த காலிப் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பித்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக http://www.tngasa.in என்ற இணையதளம் இன்று (15.12.2022) உயர்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் இன்று முதல் (15.12.2022) முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.
இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி இடத்திற்கான கல்வித் தகுதி பெற்றவர்களும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி என்ன?
* 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.
* நெட் / ஸ்லெட் அல்லது செட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அல்லது
* உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி. பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/TNGAS-GL-Instruction%20Tamil%202.0_15.12.2022_11.23AM%20(1).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
பாடம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/1895%20Guest%20Lecturer%20Allotment%20District%20Wise.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in