பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மத்திய அரசை கண்டித்து புதுடெல்லி ஜந்தர்மந்தரில் நாளை (திங்கட்கிழமை) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். இதையொட்டி சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுடெல்லி செல்வதற்காக  திருச்சி ரெயில் நிலையம் வந்தனர். காலை 6.55 மணியளவில் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறியது.. ”கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜனதா கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ”

 



 

”மேலும், 1974-ம் ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து குறைந்தது 700 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வந்தது. 30 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது. தற்போது, உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும் மாதம், மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருடத்திற்கு 177 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுக்கிறது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தை எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை புதுடெல்லியில் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் நடைபெறும் போராட்டத்தில் வலியுறுத்துகிறோம்” கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் என தெரிவித்தனர். 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண