ஆர்.டி.இ ஒதுக்கீட்டின்கீழ், 2023 -24 கல்வியாண்டில் 1.32 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும்,ஒரு மாணவருக்கு பல முறை விண்ணப்பம் செய்தததின் அடிப்படையில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 688 விண்ணப்ப பதிவு செய்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், ஒன்றாம் வகுப்பிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன்படி, அடுத்த கல்வியாண்டிற்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் மே மாதம் 18ம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.
இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்துவரும் நிலையில், விண்ணப்பங்கள் சார்ந்த விபரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் 21ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே மாதம் 23ம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட குழந்தையின் பெயர், பட்டியல் விண்ணப்பத்துடன் 24ம் தேதி அன்று இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சேர்க்கை பெற்ற குழந்தைகளை மே மாதம் 29ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வரை ஆர்.டி.இ ஒதுக்கீட்டின் கீழ் 2023-24ம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உட்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 668 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாகவும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8000 தனியார் பள்ளிகளிலுள்ள 83 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பல பள்ளிகளில் தகவல் பலகை வைக்காததால் இந்த தகவல் பலருக்கும் தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.