டெட் தேர்வுக்கான தாள் 2 தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை கணினி வழியில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 2-க்கு 4,01,886 பேரும் என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்.
அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேளைகளில் நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
பயிற்சித் தேர்வு
மேற்படி கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வை மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளலாம். இதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.
தேர்வுக் கால அட்டவணை எப்போது?
ஜனவரி மூன்றாம் வாரத்தில் தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் அறிவிக்கப்படும். இந்தத் தகவல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்:
TNPSC : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு: 122 தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? https://tamil.abplive.com/education/tnpsc-important-notice-122-department-exams-answer-keys-released-95651
Anbil Mahesh: 'தமிழ்நாடு'- மாணவர்களிடம் எழுதிக் காட்டிய அமைச்சர் அன்பில்; வைரலாகும் படம் https://tamil.abplive.com/education/anbil-mahesh-poyyamozhi-wrote-tamil-nadu-and-showed-it-to-students-picture-viral-on-internet-95706