அடிக்கடி விடுப்பு எடுக்கும் மற்றும் நீண்ட காலமாக விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடனே அனுப்ப வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 75 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களாக சுமார் 2.90 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.


எமிஸ் செயலிக்குப் பதிலாக தற்போது ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு டிஎன்எஸ்இடி என்னும் செயலி (TNSED Schools app) வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் விடுப்பு விவரங்களும் இந்த செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.


இந்த நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் அதிக விடுப்பு எடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, 


1. நீண்ட காலமாக விடுப்பில் உள்ளவர்கள்,
2. நீண்ட காலமாக தகவல் இன்றி பணிக்கு வராதவர்கள்‌
3. தொடர்ந்து விடுப்பில்‌ உள்ளவர்கள்‌ (அடிக்கடி விடுப்பில்‌ உள்ளவர்கள்‌).


மேற்காணும்‌ விவரங்களை மிகவும்‌ அவசரம்‌ எனக் கருதி deesections@gmail.com என்ற இ -மெயில் முகவரி மூலம்‌ உடனடியாக  தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்‌ (தொடக்கக் கல்வி)  கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌’’.


இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி தெரிவித்துள்ளார்.


வருகைப் பதிவுக்கு தனிச் செயலி


* கடந்த ஆண்டு ஆகஸ்ட்‌ 1ஆம் தேதி முதல்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்ய வேண்டாம்‌ என்றும் வருகைப்‌ பதிவை TNSED செயலி வாயிலாகப் பதிவு செய்தால்‌ மட்டும்‌ போதுமானது எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.


* ஆசிரியர்கள்‌ விடுமுறை விண்ணப்பிப்பதை TNSED செயலியில்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்‌.


* முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ சுயவிவரங்களை EMIS ஒருங்கிணைப்பாளர்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்து முடிக்க வேண்டும்‌


* மேல்நிலை மற்றும்‌ உயர்நிலை பள்ளிகளில்‌ காலியாக உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமனம்‌ செய்து நிர்வாகம்‌ மற்றும்‌ நிதி செலவினம்‌ மேற்கொள்ள முழு அதிகார ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்:


பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத் தாளைக் காணலாம்.