குரூப் 1 தேர்வு பற்றிய பொய்யான தகவல்களைத் தேர்வர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேரு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 


துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர்.


இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


Also Read | SP Velumani Scam : ’வேலுமணி ஊழலுக்கு உதவிய அதிகாரிகள்’ சிக்கிய 12 பேரின் Exclusive பட்டியல்..!


தேர்வு செய்யப்பட்டோருக்கு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது.  அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 29) வெளியாகின. இதில் 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. இதில் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கிடையே குரூப் 1 தேர்வு முடிவுகள் பற்றி, சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ குரூப் 1-ல் அடங்கிய பதவிகளுக்காக 04.03.2022, 05.03.2022 மற்றும்‌ 06.03.2022 அன்று நடைபெற்ற முதன்மை தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, 13.07.2022 முதல்‌ 15.07.2022 வரை நடைபெற உள்ள நேர்முகத்‌ தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தெரிவாளர்களின்‌ பட்டியல்‌ 29.06.2022 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிடப்பட்டது. 


இது தொடர்பாக, முகநூல்‌ பக்கத்தில்‌ தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளுக்கு அவதூறு ஏற்படுத்தும்‌ வகையில்‌ பொய்யான தகவல்கள்‌ பதிவிடப்பட்டுள்ளன. இவ்வினம்‌ குறித்து தொடர்புடைய நபர்‌ மீது பொய்யான தகவலை பதிவிட்டமைக்காக சைபர்‌ கிரைமில்‌ தேர்வாணையத்தால்‌ புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது எனத்‌ தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற பொய்யான தகவல்களை தேர்வர்கள்‌ நம்ப வேண்டாம்‌ என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’’.


இவ்வாறு உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.