குரூப் 1, குரூப் 5 உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள், வெற்றி பெற்ற தேர்வர்களின் முக்கிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளிப்படையாக வெளியிட்டுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி படிப்பு தகுதி, பதிவு எண், ரேங்க், மதிப்பெண், சமூகப் பிரிவு, தேர்வு பிரிவு, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதேபோல முதன்மைத் தேர்வு கட்- ஆஃப் மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வில் பெற்ற கட்- ஆஃப் மதிப்பெண்கள், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் ஆகிய விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
5 ஆண்டு விவரங்கள் வெளியீடு
2019ஆம் ஆண்டு முதல் 2024 வரை பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகள் மற்றும் அவர்களின் கலந்துகொண்ட தேர்வர்கள், வெற்றி பெற்றோரின் விவரங்கள் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மக்கள் https://www.tnpsc.gov.in/English/OpenDataPolicy.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, இவற்றை அறிந்துகொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மை
கடந்த காலங்களில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், மேலே குறிப்பிட்ட விவரங்களை பட்டியலிட்டு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்?
எனினும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கை வெளியாகி, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடைபெற்ற குரூப் 1 தேர்வின் விவரங்களை வெளியிடாதது ஏன் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.