டிஎன்பிஎஸ்சி நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.    


நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு அண்மையில் விண்ணப்பப் பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் 105 இடங்களுக்கு நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 30)  தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


செப்டம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


மாணவர்கள் இதற்கு செப்டம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.


முன்னதாக நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தகுதியாக டிப்ளமோ, ஐடிஐ தரத்திலான படிப்புகள் கூறப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்வு, மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட மேலாண்மை ரீதியிலான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. 


இதற்கு அடிப்படைத் தகுதியாக இளநிலை பொறியியல் படிப்பு அல்லது எம்பிஏ படிப்பு மற்றும் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது. 


தேர்வு முறை


இவர்களுக்காக இரண்டு தாள்களுக்குத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் தாளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, பொது அறிவு, மனத் திறன் அறிவு ஆகிய தேர்வுகளும் 2ஆவது தாளில், பாடம் தொடர்பான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு இறுதியாக நேர்காணல் நடத்தப்படும்.




என்னென்ன ஆவணங்கள் முக்கியம்?


10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / டிப்ளமோ / பட்டம் / முதுகலை பட்டம் / ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் / Ph.D பட்டம் / தற்காலிக பட்டம் அல்லது தற்காலிக டிப்ளமோ சான்றிதழ் / பட்டத்துடன் ஒருங்கிணைந்த மதிப்பெண் தாள் அல்லது தற்காலிக பட்டப்படிப்புச் சான்றிதழ் ஆகியவை கல்வித் தகுதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.


தேர்வு மையங்கள்


சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கரூர், வேலூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.


விண்ணப்பக் கட்டணம்


தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் சிறப்புப் பிரிவினர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பிப்பதற்கான தகுதி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காண https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.