தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (குரூப் 1 சி) பணி பதவிக்கான முதல்நிலைத் தேர்வை எழுதும் ஆசிரியர்கள், 10, 12ஆம்வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எழுத்துத் தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 13.01.2023 அன்று வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஒரு முறை பதிவு / நிரந்தரப் பதிவு
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக் கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப் பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொருதேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
என்ன பணியிடங்கள்?
பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் 2062
பணியின் பெயர் - தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை - 11
ஊதியம்
ரூ.56,900- ரூ.2,09,200/-
பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும் ஆசிரியராகப் பணிபுரிவோர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு விவரம்
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 20ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதன்மைத் தேர்வு விவரங்கள் வெளியாகும்.
கல்வித் தகுதி
முதுகலைப் படிப்புடன் பி.டி./ பி.எட். பட்டங்களை முடித்திருக்க வேண்டும்.
இடைநிலைக் கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (குரூப் 1 சி) பணி பதவிக்கான முதல்நிலைத் தேர்வை எழுதும் ஆசிரியர்கள், 10, 12ஆம்வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் (குரூப் - I C பணிகள்) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) கணினிவழித் தேர்வாக (Computer Based Test) 20.04.2023 அன்று 9.30 முற்பகல் முதல் 12.30 பிற்பகல் வரை நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், 10ஆம் வகுப்பு தேர்வுப்பணி மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின், அவர்கள் தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு
பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.