கடலூர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய திமுக கவுன்சிலருக்கு எதிராக அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கவுன்சிலருக்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பாக  துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை அவரை கைது செய்துள்ளது.


சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள்:


பெண்களுக்கு எதிராக குறிப்பாக சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. 


இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்கள் குறைந்தபாடில்லை.


சமீபத்தில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, மூக்கையூர் கடற்கரையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.


வேலூரில் பெண் மருத்துவர் கத்திமுனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதேபோல, கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு நடத்துநரால் பாலியல் தொல்லை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளுக்குப் பாலியல் தொல்லை, விருதுநகரில் இளம்பெண்ணை திமுகவினர் கூட்டுப் பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டு, சென்னை செங்குன்றத்தில் 13 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை, திருப்பூர் மாவட்டம் சின்னக்கரையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் கைது செய்யப்பட்டார் எனக் கடந்த 2 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 442 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 1,077 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதன் உச்சமாக சமீபத்தில் நெல்லை பழவூரில் பெண் போலீஸ் எஸ்.ஐ மார்கரெட் தெரசா கழுத்தறுக்கப்பட்டார். இன்னொருபுறம் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனையும் கிடைப்பதில்லை.


புதுக்கோட்டையில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சரணுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்படி தாமதமாகக் கிடைக்கும் நீதியும் குற்றவாளிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.