வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். 

Continues below advertisement

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகள் உடன் கூடுதலாக சென்னையில் இருந்து 550 பேருந்துகளும், பெங்களூரு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 200 பேருந்துகள் என 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய இதுவரை 9,679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை (சனிக்கிழமை) 5,468 மற்றும் வருகிற 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 8,481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயணிகள் தங்கள் பயணத்திட்டத்திற்கு ஏற்ப டிக்கெட் முன்பதிவை www.tnstc.in என்ற இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.