குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை - நீதிபதி கருத்து.

 

தகுந்த உத்தரவாத  பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு  விசாரணை நீதிமன்றங்கள் வாகனங்களை திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும் - நீதிபதி உத்தரவு.

 

மதுரையை சேர்ந்த பாலகணேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வன சரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வனபகுதியில்  கன்னிவெடி மறைத்து வைத்து புள்ளிமான்களை வேட்டையாடியதாக என் மீதும் என்  நண்பர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் ஆயுத சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக எனது  கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

 




 

ஆனால் இந்தச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும்  15 நாட்களுக்கு பின்னர் தான் என் வீட்டில் வைத்து என்னை கைது செய்தனர்.  இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி கேட்டபோது, அதற்கு வனத்துறையினர் மறுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்த காரை திரும்ப ஒப்படைக்கக் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.



 

இந்ந மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்திவைப்பதால் எந்தப்பயனும் இல்லை. இதுபோன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை தகுந்த உத்தரவாதம் மற்றும் பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டால் வாகனங்களை விசாரணை நீதிமன்றங்கள் திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும்.

 

எனவே மனுதாரர் 1லட்ச ரூபாயை வழக்கில் வைப்பு தொகையை வைக்க உத்தரவிட்ட நீதிபதி,  இனி  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்து வாகனத்தை திரும்ப வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.