கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத் தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் (TENTATIVE KEYS) டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கால் காசாக இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்பது மிகவும் பழமையான மொழியாக இருந்தாலும், இன்றளவும் பல இளைஞர்களின் நினைப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றவே ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று அரசு வேலையை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சில நூறு காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பதை பார்த்தே, அரசு வேலைக்கு இளைஞர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
தேர்வு அட்டவணை
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற துறைத் தேர்வுகளின் உத்தேச விடைக் குறிப்புகள் (TENTATIVE KEYS) டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளதாவது:
''கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வுகள், 12.12.2022 முதல் 2112.2022 (18.12.2022 நீங்கலாக) வரை நடைபெற்றன. குறிப்பாக 151 துறைத் தேர்வுகள் கொள்குறி வகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இந்தத் தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative KEYS) தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் (09.01.2023 முதல் 15.01.2023 அன்று மாலை 5.45 மணிவரை ) மறுப்பு தெரிவிக்க வேண்டும்.
மறுப்பு தெரிவிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் அவர் தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அந்த வினாவின் உத்தேச விடை, அந்த வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்த விவரங்களை tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து, கடிதம் வாயிலாக விண்ணப்பதாரரின் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அந்தத் தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.