குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன்படி, மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை கலந்தாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
தமிழக அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1, 2, 3, 4 எனப் பல வகையான தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது.
2023 பிப்ரவரியில் முதன்மைத் தேர்வு
அந்த வகையில் Group 2A-வுக்கான முதல்நிலைத் தேர்வும் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் எழுதினர். இதில் 161 நேர்காணல் பணியிடங்களும், 5990 நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. முதல் நிலை தேர்வில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது.
இதன் தேர்வு முடிவுகள் நடப்பாண்டின் ஜனவரி மாதம் வெளியானது. இதற்கிடையில் நேர்காணல் கொண்ட 161 பணியிடங்களுக்கு 483 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு கட்டங்களாக அழைக்கப்பட்டு சிறப்புத் துறை உதவியாளர் 29 பணியிடங்கள் தவிர்த்து மற்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 ஏப்ரல் மாதம் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
அதேநேரத்தில் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் நீண்ட மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்து, ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் 5,990 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள், கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு
இவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை, இந்தப் பணிகள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளன.
இதுதொடர்பான அறிவிக்கையை https://www.tnpsc.gov.in/Document/Counselling/03_2022_GROUP_II_A_PCV_COUNS_SEL_I.pdf என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/