மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஷவர்மாவை விற்பனை செய்த ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


மேலும், இதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


என்ன நடந்தது..? 


19 வயது இளைஞர் பிரதாமேஷ் போக்சே, டிராம்பே காவல் நிலைய எல்லைக்குள் வரும் மகாராஷ்டிரா நகரில் கடந்த மே 3ம் தேதி மாலை 6 மணியளவில் ஷவர்மாக சாப்பிட்டுள்ளார். மறுநாள் மே 4ம் தேதி காலை 7 மணிக்கு அவருக்கு வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுவனின் குடும்பத்தினர் முதலில் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அப்போது டாக்டர் சிறிய அளவிலான வலி நிவாரணம் கொடுத்து, வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் பிரதாமேஷ் எதுவும் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. 


அதனை தொடர்ந்து, மே 5ம் தேதி காலை 8 மணி முதல் பிரதாமேஷூக்கு மீண்டும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தினர், அவரை KEM மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டியுள்ளனர். அப்போது, மருத்துவர் பிரதாமேஷூக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மாலையில் இருந்து பிரதாமேஷூக்கு மீண்டும் அதே பிரச்சனைகள் தொடங்கியுள்ளது. மீண்டும் அவர் KEM மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 


தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததை கண்ட மருத்துவர்கள் பிரதாமேஷூயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், பிரதாமேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மே 7ம் தேதி காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார். 


இந்த உயிரிழப்பு தொடர்பாக  கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ராசா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தவிர, ஷவர்மாவின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 


முதற்கட்ட விசாரணையில், கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட பிறகுதான் பிரதாமேஷின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், பின்னர் அவர் இறந்ததாகவும் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஐபிசி 304, 336, 273/34 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


கடந்த வாரத்தில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி: 


இதற்கிடையில், இதேபோல் மும்பையின் கோரேகான் பகுதியில் கடை ஒன்றில் உணவை சாப்பிட்டு கடந்த இரண்டு நாட்களில் 12 பேர் உடல் உபாதைகள் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. இங்கேயும், மக்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாலையே இந்த பாதிப்புகள் நிகழந்ததாக கூறப்படுகிறது.


பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பன்னிரண்டு பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை ஒன்பது பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.