குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்துள்ளன. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர். அதேபோல டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தாமதம் குறித்து, தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள், 6,231 ஆக உயர்ந்துள்ளன. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிதாக சேர்க்கைப்பட்ட இடங்கள், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அரசாணைப்படி, காலி இடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டது போக மீதமுள்ள இடங்கள் ஆகியவற்றைக் காண https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM%20_03D_2022.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/
இதையும் வாசிக்கலாம்: TNPSC Annual Planner 2024: ஜூனில் குரூப் 4 தேர்வு- ஆகஸ்ட்டில் குரூப் 2, ஜூலையில் குரூப் 1 தேர்வுகள்- டிஎன்பிஎஸ்சி முழு அட்டவணை இதோ!