குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜனவரி 27ஆம் தேதியே கடைசி என்று தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின.  


தொடர் தாமதம்


முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், 55,071 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. 


நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜன.11 அன்று வெளியாகின. குறிப்பாக, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின. 


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf என்ற இணைப்பைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில் 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  அறிவிக்கப்பட்டனர். அதேபோல நேர்காணல் அல்லாத பதவிகளுக்கும் தேர்வு முடிவுகள், Interactive Mode முறையில் வெளியாகின. இந்த நிலையில், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜனவரி 27ஆம் தேதியே கடைசி என்று தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இறுதி வாய்ப்பு


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


’’டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை எண் 03/2022 நாள் 23.02.2022 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு- (நேர்முகத் தேர்வு பதவிகள்) குரூப் 2-ல் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை முழுமையாக / குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


எனவே இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 13.01.2024 முதல் 27.01.2024 மாலை 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே அந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருமுறைப் பதிவு(OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்’’ என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.