Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள ஜனவரி 22ம் தேதி, 4.25 அடி உயர ராமர் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட உள்ளது.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா:


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அன்றைய நாளில், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஒட்டுமொத்த இந்துக்களும் இந்த விழாவினை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.






ஜனவரி 22ம் தேதி நடக்கப்போவது என்ன?


இந்நிலையில், குடமுழுக்கு விழா நடைபெற உள்ள ஜனவரி 22ம் தேதி கோயில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில், கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்வதற்காக 51 இன்ச் உயரத்திலான ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையானது பிரதிர்ஷ்டை செய்வதற்கு முன்பாக சரயு நதிக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து மண்டப நுழைவு பூஜை, வாஸ்து பூஜை மற்றும் முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயர் பூஜையும் நடத்தப்படும். பிறகு ராமர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு 125 கலசங்களை கொண்டு வழிபாடு செய்யப்படும். வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடைபெறும். இறுதியாக கோயில் கருவறையில் பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிர்ஷ்டை செய்வார். இந்த நிகழ்வு வரும் 22ம் தேதி நண்பகல் 12.29 மணிக்கு தொடங்கி, 12.30 மணிக்கு முடியும். இதன் மூலம் 550 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:


கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். இதனால், அயோத்தி நகரம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக உத்தரபிரதேச காவல்துறை, 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று பாதுகாப்பை உறுதிசெய்ய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த உள்ளது. அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாட்டை கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. கோயில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.