குரூப் 2 தேர்வு முடிவுகளை 10 மாதங்களாக வெளியிடாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
குரூப்2 தேர்வு முடிவுகள் தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், தேர்வர்கள், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results என்ற ஹேஷ்டேகையும் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி, தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/ 2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை.
பல்வேறு நிர்வாக குளறுபடிகளுக்கு இடையே தேர்வு நடைபெற்ற நிலையில் , தேர்வு முடிவுகளும் வெளியிடப்படாமல் இருப்பது தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளே 2 மாதங்களில் வெளியாகிவிட்ட நிலையில், மாநில தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்களாக வெளிவராமல் இருக்கின்றது.
சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரோ "இன்று வந்துவிடும்- நாளை வந்துவிடும்" என்று சொல்லி மாதங்களும் கடந்தோடுகிறதே தவிர முடிவுகளை வெளியிட எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டணங்கள்.
இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் 5.50 லட்சம் அரசுப்பணிகள் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 187ன் படி தற்போது வரை 2.5 லட்சம் பணிகளுக்கான ஆணைகளை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், மெத்தனப் போக்கின் மொத்த உருவமாக இருக்கும் இந்த செயலற்ற விடியா அரசு, மற்ற வாக்குறுதிகளை போலவே இதையும் காற்றில் பறக்க விட்டுவிட்டது.
அமைப்பு குளறுபடிகளைக் களைவதற்கு, இந்த விடியா திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும்
மேலும் காலி அரசு பணியிடங்களை நிரப்ப , முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் ஒழுங்குடன் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டுமென இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.