கரூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. டேங்கர் லாரியில் தீப்பிடித்தால் எவ்வாறு அதனை தடுப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில் உள்ள மதுரை, கோவை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு தனியார் லாரிகள் மூலம் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த டேங்கர் லாரிகள் விபத்தில் சிக்கிக் கொண்டால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கள் பேருந்து நிறுத்தம் அருகில் செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சிறப்பாக செயல் முறை விளக்கம் அளித்தனர்.
டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டால் ஓட்டுநரை மீட்பது, டேங்கர் லாரியை குளிவித்தலுக்காக தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தீ ஏற்பட்டால் கெமிக்கல் உதவியுடன் தீயை அணைப்பது, ஒரு டேங்கரிலிருந்து, மற்றொரு டேங்கர் லாரிக்கு எவ்வாறு மாற்றுவது போன்ற செயல்முறைகளை அவர்கள் செய்து காண்பித்தனர். இதனை அப்பகுதி பொதுமக்கள், சாலையில் செல்வோர் பலரும் பார்த்துச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து போன்று நடைபெற்ற இந்த செயல்முறை விளக்கத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.