குரூப்2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ள தேர்வர்கள், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results  என்ற ஹேஷ்டேகையும் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.


9 லட்சம் பேர் பங்கேற்பு


இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.


இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. 


2022 மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.


முதன்மைத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என ஒட்டுமொத்த தேர்வு செயல்முறை 2 ஆண்டுகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.




அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்


இதற்கிடையே மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ’’குரூப் 2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் இரண்டு வாரம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வரை (டிச.16) வெளியாகவில்லை.


இந்திய அளவில் ட்ரெண்டாகும் டிஎன்பிஎஸ்சி


இதைத் தொடர்ந்து தேர்வர்கள், #TNPSC என்ற ஹேஷ்டேகையும் #WeWantGroup2Results  என்ற ஹேஷ்டேகையும் எக்ஸ் தளத்தில் (ட்விட்டர் தளம்) இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.