திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு நபர்களுக்கு பன்றிக் காய்ச்சல், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் புதிதாக மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அப்போதைய முதல்லவரால் திறக்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் இருதயம், எலும்பு, நுரையீரல், பிரசவம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் பாம்பு கடி மற்றும் இருதயம் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்பொழுது வடகிழக்கு மற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக காய்ச்சல் என்பது அதிக அளவில் பரவி வருகிறது. இதனை அடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதாகவும் அனைத்து மருந்துகளும் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு நபர்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மன்னார்குடியில் இருந்து ஒரு நோயாளி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவருடைய உடல் நிலையும் நல்ல முன்னேற்றத்துடன் காணப்படுவதாக மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.