குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல், ஆவணங்கள் சரிபார்ப்பு என 4 நிலைகளில் நடைபெறுகின்றன. மொத்தம் 116 நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.


முதல்நிலைத் தேர்வு மே 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 20 நகரங்களில் நடைபெறும். 


ஒரு முறை பதிவு கட்டாயம்


விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறை பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150/-ஐச் செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப் பதிவு மூலமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்‌. நிரந்தரப் பதிவு முறையில்‌ பதிவு செய்த விண்ணப்பங்கள்,‌ பதிவு செய்த நாளில் இருந்து 5 வருட காலத்துக்குச் செல்லத்தக்கது‌. அதன்‌ பிறகு உரிய பதிவுக்‌ கட்டணத்தைச்‌ செலுத்தி புதுப்பித்துக்‌ கொள்ள வேண்டும்‌. நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகவும் கருதப்படாது.




நேர்முகத் தேர்வு பதவிகள்


இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு என 4 நிலைகளில் நடைபெறுகின்றன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, நன்னடத்தை அலுவலர்- சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப் பணிகள்‌ துறை, உதவி ஆய்வாளர்- தொழிலாளர்‌ துறை, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌, சிறப்பு உதவியாளர்‌- ஊழல்‌ தடுப்பு, தனிப்‌ பிரிவு உதவியாளர்‌-நுண்ணறிவுப் பிரிவு காவல்‌ ஆணையர்‌ அலுவலகம், தனிப்‌ பிரிவு உதவியாளர்‌, குற்றப் புலனாய்வுத்‌ துறை‌ ஆகிய பதவிகளுக்கான காலி இடங்களுக்கு நேர்முகத் தேர்வுடன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்‌ பதவிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. 


நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்


அதேபோல, நேர்முகத் தேர்வு இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நகராட்சி ஆணையர்- நிலை-॥- நகராட்சி நிர்வாகத்‌ துறை, உதவிப்‌ பிரிவு அலுவலர்‌கள், முழு நேர விடுதிக்‌ காப்பாளர்‌ (ஆடவர்‌ விடுதி), முதுநிலை ஆய்வாளர்- கூட்டுறவு சங்கம், தணிக்கை ஆய்வாளர்‌, உதவி ஆய்வாளர்‌- உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை, வருவாய் உதவியாளர், உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 


வயது வரம்பு


அனைத்துப் பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நன்னடத்தை அலுவலர்- சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப் பணிகள்‌ துறை பதவிக்கு 22 வயதும்  சார் பதிவாளர், நிலை-॥ பதவிக்கு 20 வயதும் குறைந்தபட்சம் அவசியம். தேர்வர்கள் அதிகபட்சமாக 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆ.தி. (அ), ப.ப., மி.பி.வ., பி.வ.(இஅ) மற்றும்‌ பி.வ.(இ) ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல்‌ பத்தாண்டு வரை வயது வரம்புச்‌ சலுகை பெறத்‌ தகுதியுடையவர்கள்‌.


கல்வித்தகுதி


ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு விதமான கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக இளங்கலைத் தகுதி அவசியம். கூடுதலாகத் தமிழ் மொழியில் போதிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். சில தேர்வுகளுக்கு உடற்தகுதிச் சான்றிதழ் அவசியம். 




தேர்வுக் கட்டணம்


நிரந்தரப்‌ பதிவுக் கட்டணம்‌- ரூ.150/-


நிரந்தர பதிவில்‌ பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. 


முதல்நிலைத்‌ தேர்வுக் கட்டணம்


முதல்நிலைத்‌ தேர்வுக்கு, கட்டணச்‌ சலுகை பெறத் தகுதியுடையவர்கள்‌ தவிரப் பிறர் இணையவழி மூலம்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கும்போது ரூ.100/- தேர்வுக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்‌.


முதன்மை எழுத்துத்‌ தேர்வுக் கட்டணம்


முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று,‌ முதன்மை தேர்விற்கு அனுமதிக்கப்படும்‌ விண்ணப்பதாரர்களில்‌ தேர்வுக் கட்டண சலுகை பெற்றோர்‌ தவிர ஏனையோர்‌ முதன்மை தேர்விற்கான கட்டணமாக ரூ.150-ஐச் செலுத்த வேண்டும்‌.


யாருக்கெல்லாம் கட்டணமில்லை?


* ஆதி திராவிடர்,
* ஆதி திராவிடர் (அருந்ததியினர்),
* பழங்குடியினர், 
* மாற்றுத்திறனாளிகள்,
* ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்குக் கட்டணமில்லை.


மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 3 முறை மட்டும்‌ கட்டணம்‌ செலுத்தத் ‌தேவையில்லை
இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ / பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர்‌ 3முறை மட்டும்‌ கட்டணம்‌ செலுத்தத்‌ தேவையில்லை.


தேர்வுக் கட்டணத்தை இணையம் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். 


தேர்வு முறை


முதல்நிலைத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொதுத்தமிழ் அல்லது பொதுத்தமிழ் ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு இரண்டும் சேர்த்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 


முதன்மைத் தேர்வு


முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாகப் பிரித்து நடத்தப்படும். முதல் தாளில், பத்தாம் வகுப்புத் தரத்தில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு நடத்தப்படும். 3 மணி நேரத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் மதிப்பெண்கள் தரவரிசையில் கணக்கில் கொள்ளப்படாது. எனினும் தாள் 1-ல் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 திருத்தப்படும்.


இரண்டாவது தாளில், பொது அறிவு பகுதியில் இருந்து 3 மணி நேரத்துக்கு 300 கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். 





எப்படி விண்ணப்பிப்பது?


1. விண்ணப்பதாரர்கள்‌ www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின்‌ இணையதளங்கள்‌ மூலம்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.


2. எந்தவொரு பதவிக்கும்‌ விண்ணப்பிக்கும்‌ முன்பு ஆதார்‌ எண்‌ மூலம்‌ ஒருமுறைப் பதிவு எனப்படும்‌ OTR மற்றும்‌ தன்விவரப் பக்கம் ‌என்னும் (Dashboard) ஆகியன கட்டாயமாகும்‌.


3. ஒருமுறைப் பதிவில்‌ பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள்‌ தங்களது புகைப்படம்‌, கையொப்பம்‌ ஆகியவற்றைற CD/DVD/Pen drive போன்ற ஏதேனும்‌ ஒன்றில்‌ பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்‌.


4. ஒரு விண்ணப்பதாரர்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஒருமுறைப்‌ பதிவுக்‌ கணக்கை க (One Time Registration ID) உருவாக்க அனுமதியில்லை.


5. ஒருமுறைப் பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம்‌ அல்ல, இது விண்ணப்பதாரர்களின்‌ விவரங்களைப்‌ பெற்று அவர்களுக்கு தன்விவரப்‌ பக்கம்‌ ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும்‌. 


6. எந்தவொரு பதவிக்கும்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ விண்ணப்பதாரர்கள்‌, அறிவிக்கையில்‌ Apply என்ற உள்ளீடு வழியே நிரந்தரப் பதிவுக்குரிய பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌.


7. புகைப்படம்‌, குறிப்பிட்ட ஆவணங்கள்‌ மற்றும்‌ கையொப்பம்‌ இல்லாமல்‌ அனுப்பப்படும்‌ இணையவழி விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.


8. இணையவழி விண்ணப்பத்தில்‌ சில தளங்கள்‌ இருத்த இயலாது. எனவே, விண்ணப்பதாரர்கள்‌ மிகுந்த கவனத்துடன்‌ விவரங்களைப்‌ பதிவு செய்ய வேண்டும்.


9. இணையவழியில்‌ சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில்‌, விண்ணப்பதாரர்களின்‌ விவரங்கள்‌ இறுதியானவையாகக்‌ கருதப்படும்‌. இணையவழி விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, திருத்தம்‌ கோரி தேர்வாணையத்தில்‌ பெறப்படும்‌ எந்தவொரு கோரிக்கையும்‌ பரிசீலிக்கப்பட மாட்டாது.


கூடுதல் விவரங்களுக்கு: https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/tnpsc/PIY0000001/notice/2022_03_CCSE_II_Notfn_Tamil_Final_2022-02-23_12-20-51.pdf என்ற இணையதளத்தை க்ளிக் செய்து பார்க்கவும்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.