2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.


முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.


இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


’’குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி மே 21ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காகத் தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும். 


தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வர்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 89 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்துள்ளனர். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். 


தமிழ் வழியில் பயின்றதாக 79 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.


சென்னையில் அதிகபட்சமாக 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுத உள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுத உள்ளனர். 


பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.’’


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.