ஒரு தேர்வு முடிவை வெளியிட ஒன்றரை ஆண்டுகளா? என்று கேள்வி எழுப்பியுள்ள தேர்வர்கள், குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைந்து வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான பதிவுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தகுதிக்கும் வேலைக்கும் ஏற்ப, குரூப் 1, குரூப் 2, குரூப் 4 எனப் பல பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்வு முடிவுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
என்ன காரணம்?
மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இவற்றால் தாமதம் ஏற்பட்டது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நியாயமே இல்லை
இந்த நிலையில் இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. முதல்நிலைத் தேர்வை 2022 மே மாதத்தில் எழுதிய நிலையில், 1.6 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 டிசம்பரில் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதில் நியாயமே இல்லை. இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல தொடர்ந்து நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என 2 ஆண்டுகளைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேர்வர்கள், ’’எங்கள் இன்னுயிர் அரசுப் பணியில் உள்ளது. எங்கள் லட்சியம் மண்ணோடு போகாமல் காக்க குரூப் 2 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுங்கள்’’ என்று பதிவிட்டு, ட்ரெண்டாக்கி வருகின்றனர்.