TNPSC Group 2, 2A Exam Answer Key: குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும். அதில் தேர்வர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் இருந்தால், ஆட்சேபனை செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அடுத்த வாரத்தில் ஆன்சர் கீ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2,327 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.


இந்த ஆண்டில் 10 தேர்வுகள்


நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டது. இதில் 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகின. அதற்கான அறிவிக்கைகள் வெளியாகி, தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் மீதமுள்ள இரண்டு தேர்வுகள் திட்டமிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.


இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 10 ஆயிரத்து 315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இன்னும் 10,872 பேருக்கு வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் மொத்தம் 20 ஆயிரம் பேர் பயனடைவர்.


விடைக்குறிப்பு எப்போது?


குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் போடப்படும். அதில் தேர்வர்களுக்கு ஏதாவது குழப்பங்கள் இருந்தால், ஆட்சேபனை செய்யலாம். நிபுணர்கள் குழு மூலம் இறுதி விடைக் குறிப்பு தயாரிக்கப்படும்.


விடைத்தாள் திருத்தும் பணி


சுமார் 7.9 லட்சம் தேர்வர்கள் எழுதிய தேர்வு என்பதால், குரூப் 2 தேர்வு வினாத் தாள்களை திருத்தும் பணிகள் 2 அல்லது 3 மாதங்கள் வரை நடக்கும். கூடுதல் ஸ்கேனிங் இயந்திரங்கள், கூடுதல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவாகத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பிறகு முதன்மைத் தேர்வு நடைபெறும்.


குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?


கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும்’’.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.