சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் அவர் அடித்த ஒரு சிக்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த தற்காலிக சுவரை உடைத்து ஓட்டை போட்டு இருக்கிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்க உள்ளது. 


போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கான 5 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை பிசிசிஐ ஏற்பாடு செய்தது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னைக்கு வந்தனர். அதோடு இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார். 


வெறித்தனமான பயிற்சியில் விராட் கோலி:


பொதுவாக விராட் கோலி அதிக சிக்ஸர்கள் அடிப்பதை விட பவுண்டரிகளை தான் விரும்பி அடிப்பார். ஆனால், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் கோலி உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் பந்து வீச்சில் இமாலய சிக்ஸ் ஒன்றை அடித்திருக்கிறார். அந்த பந்து மைதானத்தின் உட்புறத்தில் இருக்கும் தற்காலிக சுவரின் மீது மோது அதை சேதப்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்டில் பேட்டால் பதிலடி கொடுப்பார். அதற்கான முன்னோட்டம் தான் இது என்று கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 






முன்னதாக டி20 உலகக் கோப்பை மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவில் ரன் குவிக்கவில்லை. 2020க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம் சராசரியாகவே உள்ளது. இச்சூழலில் இது போன்ற வெறித்தனமான சிக் ஸர்கள் அவருக்கு புதிய பார்மை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


அதோடு டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் நஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் விராட் கோலியும் அந்த பட்டியலில் இருக்கிறார். 2020 க்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் இந்த வீரர்களை விட அதிக சதம் அடித்தவராக இருந்தார். தற்போதைய சூழலில் இவர்கள் கோலியை விட நல்ல பார்மில் இருப்பதால் இனி வரும் மூன்று டெஸ்ட் தொடரும் கோலிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.