தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 1,83,285 பேர் எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். அதாவது 84.44% பேர் தேர்வு எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்தனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்தனர்.
ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வர்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 89 பேரும் விண்ணப்பித்தனர். மூன்றாம் பாலினத்தவர் 48 பேர் விண்ணப்பித்தனர். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்தனர். 79 ஆயிரத்து 942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பம் செய்தனர்.
முதல்நிலைத் தேர்வை 3 முறை இலவசமாக எழுதலாம். இந்தப் பிரிவின் கீழ், 6 லட்சத்து 93 ஆயிரத்து 361 பேர் இலவசமாகத் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.
குரூப் 2, 2ஏ தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. 6,400 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
தேர்வை எழுதியவர்கள், ''பொதுத் தமிழ் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. இதில் பெரும்பாலும் பழைய கேள்வித் தாள்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்களாலும் எழுத முடியும் வகையில் பொதுத்தமிழ் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பொது அறிவு பகுதியில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்தன'' என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், 9,94,878 பேர் மட்டுமே குரூப் 2, 2ஏ தேர்வில் பங்கேற்றனர். அதாவது 1,83,285 பேர் எழுதவில்லை. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 84.44% பேர் தேர்வு எழுதவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்