IRDAI To Insurers: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புதிய அறிவுறுத்தலின்படி, பயனாளர்கள் விரைந்து பணமின்றி சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்:


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பணமின்றி சிகிச்சையை மேற்கொள்வதற்கான பயனாளரின் கோரிக்கைக்கு ஒரு மணிநேரத்திற்குள் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பாலிசிதாரருக்குத் தடையற்ற, விரைவான மற்றும் தொந்தரவில்லாத க்ளெய்ம் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீடு தயாரிப்புகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை முன்பு வெளியிடப்பட்ட 55 சுற்றறிக்கைகளை ரத்து செய்கிறது. இது பாலிசிதாரர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளடக்கிய சுகாதார காப்பீட்டை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று Irdai தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஒரு மணிநேரத்திற்குள் ஒப்புதல்:


ரொக்கமில்லா அங்கீகார கோரிக்கைகளுக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் ஒப்புதல் வழங்கவும்,  மருத்துவமனையிலிருந்து கோரிக்கை விடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான ஒப்புதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் கிளெய்மிற்கு ஒப்புதல் பெற அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவது தடுக்கப்படுவதோடு, அவசர காலங்களில் தாமதமின்றி சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.


சுற்றறிக்கை வலியுறுத்தும் மற்ற வசதிகள்:


அனைத்து வயதினருக்கும், பிராந்தியங்களுக்கும், மருத்துவ நிலைமைகளுக்கும் / அனைத்து வகையான மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களுக்கும்,  காப்பீட்டாளர்கள் பரந்த தேர்வை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிம் ரொக்கமில்லா உரிமைகோரல் தீர்வுக்கான வசதியை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதற்கான இலக்கை அந்த அமைப்பு முதன்மையானதாக கொண்டுள்ளது.


நோ கிளெய்ம் போனஸ்:


பாலிசி காலத்தில் க்ளெய்ம்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், காப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதன் மூலமோ அல்லது பிரீமியம் தொகையை தள்ளுபடி செய்வதன் மூலமோ, அத்தகைய நோ க்ளைம் போனஸைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்குவதன் மூலம் காப்பீட்டாளர்கள் பாலிசிதாரர்களுக்கு வெகுமதி அளிக்கலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.


முழு தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும்:


பாலிசிதாரர்களின் பயனுள்ள, திறமையான மற்றும் தடையின்றி உள்வாங்குதல், பாலிசியைப் புதுப்பித்தல், பாலிசி சேவைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்றவற்றிற்கு,  தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


க்ளெய்ம் செட்டில்மென்ட்களுக்கு, பாலிசிதாரர் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும்,  காப்பீட்டாளர்கள் மற்றும் டிபிஏக்கள் மருத்துவமனைகளில் இருந்து தேவையான ஆவணங்களை சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிகிச்சையின்போது மரணம் ஏற்பட்டால், சடலத்தை உடனடியாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.