குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைத் தேர்வர்கள் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் தேர்வுகளிலேயே மதிப்பு மிக்கதும் அதிக ஊதியம் அளிக்கக்கூடியதுமான குரூப் 1 தேர்வை, யுபிஎஸ்சி தேர்வர்களும் எழுதுவர்.
ஜூலை மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வு
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு, 2,38, 255 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
90 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வெழுதிய 1.60 லட்சம் பேர்
90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* தேர்வர்கள் அல்லது tnpsc.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். tnpscexams.in
* அல்லது https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்தும் ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
* எனினும் போதிய விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பெற வேண்டியது அவசியம்.
* அதாவது பயனர் குறியீடு, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து, லாகின் செய்ய வேண்டும்.
* தோன்றும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.